பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. 
 
தொடர் 5 நாள் விடுமுறையால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கே.கே.நகர் என சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
 
பொங்கல் விடுமுறைக்கு அரசு பேருந்துகளில் சென்னையில் இருந்து 3 நாட்களில் 4.93 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
 
சென்னையில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
 
இந்நிலையில், சென்னையிலிருந்து பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த மூன்று நாட்களாக 4.93 லட்சம் பேர் அரசு பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.