பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது 3 ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ பதிலை ஏற்றுக்கொண்டு, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம். எனவே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது.
[su_image_carousel source=”media: 21624,21625″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில், உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 20) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யாத நிலையில், குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று புதிய வாதத்தை முன்வைப்பதற்கு பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஆளுனர் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது சரியல்ல என்றும் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், உத்தரப்பிரதேச மாநில வழக்கு ஒன்றில் 20 ஆண்டுகால சிறை தண்டனை பெற்றவர்களை, முதல்முறையாக குற்றம் செய்தவர்கள் என்கிற அடிப்படையிலும், அவர்களுடைய நன்னடத்தை அடிப்படையிலும் உச்சநீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. அதேபோல் பேரறிவாளனையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, பேரறிவாளன் வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட பின்னர், உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ ரகசியத்தை அர்னாப்பிற்கு வெளியிட்ட பாஜக புள்ளி யார்.. ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி