லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாரவி பேசியதாவது, நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பது உண்மைதான். அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்து இருப்பதே பெரிய விஷயம். அவரை பற்றி வராத செய்திகளே இல்லை. அத்தனையும் மீறி அவர் தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த பக்கம் பேயாகவும் நடிக்கின்றார், அந்த பக்கம் சீதையாகவும் நடிக்கின்றார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு கே.ஆர்.விஜயாவை மட்டுமே தேடுவார்கள். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் கடவுள் வேடத்தில் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது.
பார்த்தவுடன் கும்பிடுபவது போல் உள்ளவர்களும், பார்த்தவுடன் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கின்றனர். ஏனென்றால் நீங்கள் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்’ என்று ராதாரவி பேசினார். ராதாவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது கண்டனப் பதிவில், “ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். அதற்கும் மேலாக தரமற்ற இந்த பேச்சுக்கு கைதட்டி சிரிக்கும் பார்வையாளர்கள் குறித்தும் வருத்தமாக உள்ளது.
ஒரு முழுமை பெறாத படத்திற்கு ஏன் இப்போது புரமோஷன் என்றே தெரியவில்லை. இப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஏற்கனவே படத்தில் இருந்து விலகிவிட்ட நிலையில் பொருத்தமில்லாதவர்களை வைத்து நடத்தும் இதுபோன்ற ஒரு புரமோஷன் நிகழ்ச்சி தேவையா?
வேலையில்லாதவர்களை கூப்பிட்டு இதுபோன்ற தகாத கருத்துக்களை வாந்தியெடுக்க செய்வதற்கென்றே ஒரு விழாவா. எப்படியும் இதுபோன்ற சம்பவத்திற்கு நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காது என்பதும் ஒரு சோகமான உண்மை” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ்சிவனுக்கு ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது பதில் பதிவில், “இன்றைய நிலையில் நயன்தாரா ஒரு அர்ப்பணிப்பு தன்மையுள்ள நடிகைகளில் வெகுசிலரில் ஒருவர். அவருடன் பணிபுரிந்த காலங்களில் அவரை பற்றி பலவிஷயங்களை தெரிந்து வைத்தவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். ராதாரவி பேசிய வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானது என்று எடுத்து கூறினேன்” என்று கூறியுள்ளார்.