ஒரு அடார் லவ் மலையாள படத்தில் வரும் பாடல் காட்சியில் ஹீரோவை பார்த்து கண்ணடித்ததால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபாலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

ஒருபுறம் அவர் ஏதோ பெரிய சாதனை செய்தது போல தேசிய அளவில் பேசப்பட்டார். அவர் கண்ணடித்த வீடியோ வெளியான ஒரு வாரத்தில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் ஆனார். மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் முழு நேரமாக ப்ரியா பிரகாஷ் வாரியரை மட்டுமே வைத்து மீம்ஸ் போட்டனர். கண்ணடித்து கூட பிரபலமாகலாம் என்பதை ப்ரியாவை பார்த்து தெரிந்து கொண்டனர்.

ஆனால் மற்றொருபுறம், ப்ரியா கண்ணடித்த பாடல் வரிகள் அபத்தமானது என்றும், அவை மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருந்தது என்றும், இஸ்லாத்தில் கண்ணடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் தெய்வ நிந்தனை ஆகும் எனக் கூறி மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ப்ரியா மீது மட்டும் அல்லாமல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

தெலுங்கானாவில் தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து ப்ரியா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரின் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம், ஒரு படத்தில் யாரோ பாட்டு பாடினால் உடனே வேலை இல்லாமல் வழக்கு தொடர்வதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ப்ரியா மீதான வழக்கை தள்ளுபடி செய்ததுடன் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி இனி எங்கும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ப்ரியா நிம்மதி அடைந்துள்ளார்.