பூமியை போன்று மனிதன் வாழ்வதற்கு தகுதியுள்ள மற்ற கிரகங்களை ஆய்வுச் செய்யும் பணியில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி கழகம், இந்தியாவின் இஸ்ரோ போன்ற பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஆனால், சூரிய மண்டலத்திலுள்ள அத்தனை கோள்களும் சுற்றி வரும் சூரியனை அதனுடைய உட்சபட்ச வெப்பநிலையின் காரணமாக எவராலும் இதுவரை நெருங்க முடியவில்லை.

இந்நிலையில், சுமார் 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் சூரியனின் சுற்றுப்பாதையை மணிக்கு 7,00,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ என்னும் விண்கலத்தை வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியக் காற்று (Solar Wind) எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.