சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், அக்கட்டுமான நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் ரூ.112 கோடியில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பரசன், இது தொடர்பாக ஐஐடி குழு அமைத்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதற்கிடையே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த உதவி பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கட்டிடம் கட்டப்படும்போது அவர்கள் இருவரும் தான் கண்காணிப்பு பணியில் இருந்ததாகவும், கண்காணிப்பு பணியை சரியாக செய்யாத காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து சென்னை ஐஐடி பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான நிபுணர் குழு, கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒரு மாதத்துக்கும் மேலாக ஆய்வு செய்தது. இக்குழு அடுக்குமாடி கட்டிடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பது குறித்த ஆய்வறிக்கையை சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம், ஐஐடி குழு சமர்ப்பித்துள்ளது.
அதில், “இந்தக் குடியிருப்புகள் உரிய தரத்துடன் கட்டப்படவில்லை. எனவே, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மீதும், வாரியத்தின் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனம், மாநிலத்தின் பிற பகுதிகளில் கட்டியுள்ள கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன், இந்த கட்டுமான நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை ஆய்வுக் குழு அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.