தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் , பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் 10 கி்மீ வேகத்தில் நகர்ந்து தற்போது இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கு தென் கிழக்கே 530 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு தென் கிழக்கே 930 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி தென் தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும். இதற்கு புரெவி புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டிசம்பர் 2, 3 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 4 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.