நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.எம்.நரேந்திரமோடி படத்தை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை படத்தை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கை முதல் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்று நாட்டின் பிரதமர் ஆனது, அவர் ஆட்சியில் செய்தவை உள்ளிட்ட சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பாஜக.,விற்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.
மேலும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும் எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.