தமிழகத்தில் விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிசான் யோஜனதா திட்டத்தில், தமிழகத்தில் ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து போலி பயனர்களை நீக்கி, முறைகேடாக பெற்ற பணத்தை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், மழை மற்றும் வறட்சிக் காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையிலும் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் யோஜனதா நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா, சிட்டா ஆகியவை பெற்று, அவற்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வேளாண்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து அவர்கள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த நிதி உதவியைப் பெற்று வந்தனர்.
இதில் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால், அதிக அளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விவசாயிகள் தானாக முன்வந்து, தனியார் கணினி மையத்தில் ஆன்லைனில் நிதி உதவிக்கு விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து முறைகேடுகள் ஏற்பட்டதாக எழுந்த புகாரில், தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, போலி பயனர்களை நீக்கி பணத்தை வசூல் செய்யும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட மோசடியில் 42,000 போலி பயனாளிகள் சேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டு, இதுவரை 11,200 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து தலா ரூ.4,000 திரும்ப எடுக்கப்பட்டு, அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக போலி பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட 2 வட்டார வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மீதான வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடலூர், விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் மோசடியில் சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு- யுபிஎஸ்சி