தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. இதனையடுத்து சிபிசிஐடி போலீஸார் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த அமைப்பினை தடை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் சமூக பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து, இரண்டு மாதங்களுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பையும் தடை செய்யுமாறு தமிழக டிஜிபி திரிபாதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையேற்று பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு பல்வேறு அரசாணைகளை வெளியிட்டு பின்னர் அதனை ரத்து செய்துள்ளதால், தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு வெளியிட்டுள்ள தடை ஆணை நிரந்தரமாக நீடிக்குமா என்ற கேள்விகளும் சமூகவலைதளங்களில் எழுப்பப்படுகின்றன.
மேலும் வாசிக்க: பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இயங்கும் சேவாபாரதி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை..
முன்னதாக அதிசயகுமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏதும் உள்ளதா எனவும், காவல்துறையின் அதிகாரத்திற்குட்பட்ட பணிகளை மேற்கொள்ள, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவது மனித உரிமை மீறல் ஆகாதா..
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை முற்றிலும் களைத்துவிடுவது சரியாக இருக்குமா.. என்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுபற்றி அடுத்த நான்கு வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.