சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அத்துமீறி செயல்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குளாக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்துறையினரை சிபிசிஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.
மேலும் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பிருக்கலாம் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த காவல் நிலையத்தில் இதற்கு முன் நடந்த கொடூரங்களுக்கும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காரணமென பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் சுமார் 4,000 ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பின் மூலம் வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினருக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு நிஜக் காவலர்களை விட அதிகமாக தொடர்ந்து பல்வேறு அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பல்வேறு அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கையில் லத்தியுடன் பொதுமக்களை தாக்குவது, பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துவது, வாகனங்களை தாக்குவது, மிரட்டும் தொனியில் எச்சரிப்பது என பொதுமக்கள் அஞ்சி ஓடும் அளவிற்கு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்று பொதுமக்கள் பலரும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை; ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ விசாரிக்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
காவல்துறைக்கு நண்பன் என்ற பெயரில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பொதுமக்களுக்கு எதிரியாக மாறிக் கொண்டிருப்பதாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கையில் லத்தி வைத்திருப்பது, பொது மக்களை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்றும்,
சாத்தான்குளம் கஸ்டடி மரணத்தில் தொடர்புடைய பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் ‘சேவாபாரதி- பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பும், சாத்தான்குளம் சம்பவத்தில் ஈடுபட்ட ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பும் ஒன்றுதானா என்ற கேள்விகளும் எழுப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு 2 மாதங்கள் தடை விதிப்பதாகவும், சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தபடுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த சமூகப் பணிகள் என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=RyPF5ylEO4k” width=”700″ autoplay=”yes” title=”எப்படி ஆனார்கள் RSS அங்கமான சேவா பாரதி #friendsofpolice …”]