அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படத்தின் மீது உதவி இயக்குனர் தொடர்ந்த கதைத்திருட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்காட உள்ளதாகவும், பிகில் தயாரிப்பாளர்கள் இந்த விகாரத்தில் பொய் சொல்லி வருவதாகவும் கூறியுள்ளார் உதவி இயக்குனர் செல்வா.
தெறி மற்றும் மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லியும் விஜய்யும் மூன்றாவது முறையாக ‘பிகில்’ படத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதவி இயக்குனரான கே.பி.செல்வா என்பவர், ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனால் பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள்.
இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பிகில் படக்குழு இன்று ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கதைத்திருட்டு வழக்கில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறியிருந்தனர். ஆனால் உதவி இயக்குனர் செல்வா இதனை மறுத்து தன் தரப்பு கருத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல. அவங்க சொன்னதெல்லாம் ‘காபீ ரைட் கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும்.
அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க’ அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு, அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல வித்ட்ரா பெட்டிஷன் ஃபைல் பண்ண. அதுக்கு ஜட்ஜ் அத அக்செப்ட் பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க.
இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல ாக்ஸ் தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க, அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் வீதிராவ் பெட்டிஷன் ஃபைல் பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க.
நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும். நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க.
இப்படிக்கு K.P. செல்வா” என்று தெரிவித்துள்ளார்.