சாமியார் குர்மீத் ராம் ரஹீம், பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் சாமியாரை ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக புலனாய்வு செய்தி வெளியிட்டார்.
இதன் காரணமாக பத்திரிகையாளர் சத்ரபதி கடந்த 2002 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பால் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளி என ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குர்மீத் ராம் ரஹீம் உதவியாளராகவும், தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளராகாவும் ரஞ்சித் சிங் 4 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கடிதம் ஒன்று பத்திரிகைகளில் வெளியானது.
இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கொலையாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விவரம் அக்டோபர் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.