லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ‘2.0’. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள் இப்படம் ரூ.543 கோடி பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக 3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ளது.

‘2.0’ உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘2.0’ படத்தை பார்த்த தமிழ் திரையுலக நடிகர்கள், இயக்குநர்கள் என பல தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை இயக்குநர் ஷங்கருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், “2.0 படம் மிகவும் வெறித்தனமாக இருக்கிறது. தலைவர் ஸ்கிரீனில் வரும் காட்சிகள் மிக அற்புதமாக இருக்கின்றன. இந்தப் படம் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தி உள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், “மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளார். திரைப்படத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது இந்த படம். அதே போல் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மாற்றியமைத்துள்ளார். கண்டிப்பாக நம் காதுகளுக்கும் 2.0 விருந்தாக இருக்கும்.

இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் இமாலய சாதனையை நம்பவே முடியவில்லை. அக்‌ஷய் குமாருக்கு இந்த படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி வாழ்த்துகிறேன். 2.0 படம் திரையில் 3டி-யில் ஆச்சரியப்படுத்தும், மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் கூறுகையில், “2.0 படத்தின் அடுத்த பாகமாக 3.0படம் எடுக்கும் திட்டம் உள்ளது. இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்ததும் 2.0 படத்தின் அடுத்த அத்தியாயத்துக்கான கதையை எழுத தொடங்குவேன்.

மேலும் சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினியை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை . அந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிட்டி கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2.0 திரைக்கு வரும் முன்பே பல ஆயிரம் திருட்டு இணைய தளங்கள் முடக்கப்பட்டடு, படம் திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யப்படுவது தடுக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை வெளியிட்டு மீண்டும் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சர்கார் திரைப்படம் வெளியான நிலையில் தற்போது 534 கோடி செலவில் உருவாக்கிய இப்படத்தை.. வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது திரை உலகத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

இது குறித்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வந்தால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க முடியும்.

மேலும், திருட்டு விசிடியை ஒழிக்க தனிச்சட்டம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.