ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது “மெரினா புரட்சி”.

நாட்சியாள் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.எஸ்.ராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக வீரர்கள் களமிறங்கிய போராட்டம், பின்னர் மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வால் மெரினாவில் ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு வெற்றியை பெற்றுத்தந்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் இப்படம் உருவாகிறது. இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும் என இயக்கும் எம். எஸ்.ராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகியுள்ளது. 2017 ஜனவரி 8ம் தேதி சென்னை மெரினாவில் 18 பேர் கூடி இந்த போராட்டத்தை தொடங்கினர். அந்த 18 பேர் தான் இந்த போராட்டம் உருவாகக் காரணம். அவர்கள் அனைவரும் இந்த படத்தில் வருகின்றனர்.

ஜல்லிக்கட்டிற்கு மிகப் பெரிய தடையாக இருந்த பீட்டாவின் நோக்கம் நாட்டு மாடுகளை அழிப்பது மட்டுமே அல்ல. அவர்களின் அசைன்மெண்ட் மிகப்பெரியது. இந்த படம் எடுப்பதற்கு முன்னர் எட்டு மாதங்கள் தீவிரமாக ஆய்வு செய்தேன் அதில் நிறைய உண்மைகள் வெளிவந்தன.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடைவர காரணமாக இருந்ததே மூன்று தமிழர்கள் தான். அதில் ஒரு நடிகையும் அடங்குவார். மேலும் இதுபோன்ற நிறைய உண்மைகள் இப்படத்தின் மூலம் வெளிவரும்.

இதனால் என்ன பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டவர்கள், போராட்டத்தின் இறுதி நாட்களில் எப்படி மாறினார்கள், கடைசி நாளில் வன்முறை எப்படி வெடித்தது, போராட்டத்தை ஆட்சியாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை எல்லாம் தைரியமாக சொல்லியிருக்கிறோம்”, என தெரிவித்தார்.