இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக இருந்த சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகமாகும் ரொமாண்டிக் கலந்த காமெடி படமான “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ஒரு காமெடி ரொமான்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் தலைப்பை ஹரிஷ்கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். தனுசு ராசி நேயர்களே எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இளைஞராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், ஜாலியான காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்றும், ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.