அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என விமர்சித்ததற்காக பாபா ராம்தேவ், எழுத்துப் பூர்வமாக 15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனாவுக்கு பலியாகினர் என்று கூறியது மிகப் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாபா ராம்தேவ் தமது கருத்தை உடனடியாக திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியது.
இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொரோனாவுக்கு எதிரான போரில் போராளிகளாக செயல்படுகின்றனர் மருத்துவர்கள். அந்த மருத்துவர்களை அவமரியாதை செய்யும் வகையிலான கருத்துகளை ராம்தேவ் வாபஸ் பெற வேண்டும் என்றார். இதனையடுத்து தமது கருத்துகளை திரும்ப பெறுவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார்.
‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்
இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதற்காக எழுத்துப் பூர்வமாக வரும் 15 நாட்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பாபா ராம்தேவுக்கு ரூ.1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இந்திய மருத்துவ சங்கத்திற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால் மீது அடுக்கடுக்கான மதமாற்றப் புகார்களை முன்வைத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்தியாவையே கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதில் டாக்டர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என ஆச்சார்யா பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.
ராம்தேவ் மீது ரூ.1,000 கோடி நட்டஈடு கேட்டு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் இந்த புகாரை ராம்தேவ் தரப்பு வைத்துள்ளது. தங்கள் மீதான தொடர்ச்சியான புகார்களில் இருந்து தப்பிக்க இதுபோன்ற அவதூறு புகார்களை ராம்தேவ் தரப்பு தொடர்ந்து பரப்பி வருவதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மக்கள் உயிருடன் விளையாடுகிறீர்களா.. மோடி அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்