காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச அரசியலில், முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலில், கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களான 25 எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 25 எம்எல்ஏக்கள் உட்பட, தற்போது மாநில சட்டசபையில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் இமார்டி தேவியை ஆதரித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, தவறுதலாக காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, “எனது தாப்ரா மக்களே, உங்கள் கைகளை உயர்த்தி நவம்பர் 3 ஆம் தேதி ‘கை’ சின்னத்துக்குதான் வாக்களிப்பீர்கள் என்பதை என்னிடமும், சிவராஜ்சிங் சௌஹானிடமும் உறுதிப்படுத்துங்கள், கை சின்ன பட்டனை, அழுத்தி காங்கிரசுக்கு வாக்களியுங்கள்” என்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசினார்.
பின்னர் தவறுதலாக பேசியதை உணர்ந்து உடனடியாக பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களியுங்கள் என்று திருத்தினார். இதுதொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியினர், ஜோதிராதித்யா சிந்தியாவின் வீடியோவை பகிர்ந்து, “மத்தியப் பிரதேச மக்கள் வாக்கு இயந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்துக்குதான் வாக்களிப்போம் என்று உங்களிடம் உறுதியளித்துள்ளார்கள்” என்று பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
सिंधिया जी,
मध्यप्रदेश की जनता विश्वास दिलाती है कि तीन तारीख़ को हाथ के पंजे वाला बटन ही दबेगा। pic.twitter.com/dGJWGxdXad— MP Congress (@INCMP) October 31, 2020
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி பேசுகையில், “இது வாய் தவறி வருவது. இது அனைவருக்கும் ஏற்படும். சிந்தியா அதை உடனடியாக திருத்திக்கொண்டார். அவர் பாஜக தலைவர் என்று அனைவருக்கும் தெரியும்” என்று சமாளித்துள்ளார்.
காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு IIMCல் உயர் பதவி