அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசார கூட்டங்களால் இதுவரை 700 பேர் கொரோனவால் பலி, 30,000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து உச்சமாகவே இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 80,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் The Effects of Large Group Meetings on the Spread of COVID-19: The Case of Trump Rallies’ என்ற தலைப்பில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் (Stanford University) ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு முடிவில் ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 அரசியல் பிரசார கூட்டங்களால் 30,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இதுவரை கொரோனாவால் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே ட்ரம்ப் கூட்டம் நடைபெறும் இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலைமைமேலும் மோசமாகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் பாதித்தோர் எண்னிக்கை 94 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 236,473 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம் என ட்ரம்ப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம்- அதிரவைத்த ட்ரம்ப்

அதேபோல் மற்றொரு ஆய்வில், அமெரிக்காவில் இனவாத பிரிவினைகள் அதிகமானதற்கு அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ட்ரம்ப் வெளிநாட்டவர்கள் குறித்து பலமுறை இழிவாக பேசியுள்ளார் என்றும் சமீபகாலமாக அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருசில நேரங்களில் தமிழர்கள் கூட இதுபோன்ற இனவாத பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக இருக்கும் அமைப்பு ரீதியான இனவாதத்திற்கு உதாரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.