சசிகலா புஷ்பா மக்கள் பிரதிநிதியாக அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிய மக்களுக்கும் உரிமை உண்டு, மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சசிகலா புஷ்பா ரூ. 2 லட்சம் அபராதம் தரவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து விலகி, டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா புஷ்பா தொடர்பான பல்வேறு படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படங்கள் தமக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன; திட்டமிட்ட உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் இப்புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஹாய் என்ட்லா உத்தரவில் குறிப்பிட்டுள்ளது;
மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்க உரிமை எது, மக்கள் பிரதிநிதியாக அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார், அதை அறியும் மக்களுக்கான உரிமை- இவை இரண்டையும் அலசி ஆராய வேண்டியது உள்ளது. சசிகலா புஷ்பா மக்களின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர். அவர் சார்ந்த கட்சியை சேராத நபர்களை சந்தித்திருக்கிறார்.
மேலும் வாசிக்க: பீலா ராஜேஷ் பணியிடமாற்றம் சர்ச்சையும் பின்னணியும்..
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின் சசிகலா புஷ்பா சந்தித்து பழகியதை அறிந்து கொள்ளக் கூடிய உரிமை பொதுமக்களுக்கும் உண்டு. இந்த சந்திப்பு பொதுநலனுக்கானது எனவும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை. இதனால் சசிகலா புஷ்பா தொடர்பான படங்களை நீக்க அல்லது பார்ப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது முடியாது.
இதற்கான உத்தரவை ஃபேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு பிறப்பிக்கவும் இயலாது. மேலும் சசிகலா புஷ்பா, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம்; கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் தர வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.