பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காதது தொடர்பாக ஒன்றிய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். இருப்பினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் காலம் தாழ்த்தியதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் பின்னர் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கருப்பு நிற பேண்ட்களை அணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர்.
இதற்கிடையே தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங்கை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக ஒன்றிய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.