விவசாயிகள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு 8 பக்க கடிதம் எழுதி உள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 23வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், “புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். இதுவரை இருந்த கஷ்டங்கள் தீரும்.

விவசாய துறையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். இடைத்தரகர்களுடைய ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும். விவசாயிகள் எந்த சந்தையிலும் பொருட்களை விற்க முடியும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து நீடிக்கும்.

இந்த சீர்திருத்தங்களை பல விவசாய சங்கங்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளன. வேளாண்துறை அமைச்சர் என்ற வகையில், விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமை ஆகும்.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமையாகும். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன்.

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதில் பிடிவாதம் காட்டக் கூடாது. ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. எனவே அதை ஏற்றுக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கடிதத்தில் கூறி உள்ளார்.

இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த கடிதத்தை விவசாய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எழுதியுள்ளார்.

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண அவர் முயற்சித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் இந்த கடிதத்தை படித்துப்பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்