எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு தனது எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது பதியபட்டிருந்த 62 கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான வழக்குகளும் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.
அதில், கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் செய்ய முயற்சித்தது போன்ற குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும்.
அதேபோல், காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவிய ஆனந்த் சிங் மீது 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்த ஹாஸ்பெட் தாலுகா அலுவலகத்தைத் தாக்கியது, குற்றவியல் மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்கியது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் நீக்கப்பட்டன.
மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது அனுமதி இன்றி சென்றதால் அவர்களை தடுத்தற்காக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் நீக்கப்பட்டுள்ளது.
இதில், மாண்டியா சுயாதீன எம்.பி. சுமலதா அம்பரிஷ், யெல்பர்காவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, ஹொன்னல்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா ஆகியோர் மீதான வழக்குகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை கைவிடும் முடிவிற்கு கர்நாடக மாநில டிஜி, ஐஜிபி மற்றும் அரசு வழக்கு மற்றும் சட்டத்துறை இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பாஜக அரசு வழக்குகளில் இருந்து பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை தப்பிக்க வைக்கவே செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வாசிக்க: நீட் தேர்வு விவகாரம்.. 6 மாநில அரசுகளின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்