உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90-ஆக சனிக்கிழமை அதிகரித்தது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வாரில் உள்ள பஹல்பூர் கிராமத்தில் 7-ஆம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை அங்கு அருந்தியது மட்டுமல்லாது தங்களது வீடுகளுக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
 
இதனால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சனிக்கிழமை வரை 64 பேர் உயிரிழந்தனர். 10 பேரின் இறப்புச் சான்று இன்னும் வெளியாகவில்லை. மேலும் 22 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலோக் குமார் பாண்டே உறுதிபடுத்தினார்.
 
இச்சம்பவம் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 கிராமங்களில் நடைபெற்ற சோதனைகளில் 450 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை இதர பகுதிகளிலும் தொடர்ந்து வருவதாக சஹரண்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் தெரிவித்தார்.
 
இந்நிலையில், உத்தரண்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உத்தரண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டார்.