தமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே வண்டலூரில் நேற்று (ஆகஸ்ட் 31) பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அப்போது பாஜகவில் சேருவதற்காக ரவுடி சூர்யா, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்துள்ளார். ஆனால் அங்கு காவல்துறையினரை கண்டதும் ரவுடி சூர்யா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓட்டேரி காவல்துறையினர் கூறுகையில், “பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி சூர்யாவை பிடிக்க முயற்சித்தோம். ஆனால், அதற்குள் அவர் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஒருவரின் காரில் ஏறி சென்று விட்டான்.

ரவுடி சூர்யா மீது பீர்க்கன்காரணை, சேலையூர், ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

எனினும் சூர்யாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி சூர்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குற்றப் பின்னணி கொண்ட 6 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்கள் முன்பு பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தது சர்ச்சையாகியது. தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின், குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: 4 நாட்களில் துணை தலைவரான மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை.. அதிருப்தியில் சீனியர்கள்