மாஜி ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. திடீரென தனது பதவியில் இருந்து விலகி, சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவுக் கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.

அண்மையில், பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு, கோவை காந்திபுரத்தில் பேசிய அண்ணாமலை, “விமர்சனம் என்ற குப்பையை நெட்டிசன்கள் தன் மீது போடுகிறார்கள் என்றும், அந்த குப்பையில் தான் தாமரையை வளர்ப்பேன். பாஜகவில் இணைந்ததில் நான் பெருமை அடைகிறேன. கட்சி மேலிடம் விரைவில் எனக்கு பொறுப்பு வழங்கவுள்ளது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படுகிறார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த 4 நாட்களில், மாஜி ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது, ஹெச்.ராஜா, எஸ்வி சேகர், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜகவினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: சட்டத்தை மதிக்காத மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு