பள்ளி பாட புத்தகங்களில் வேதங்கள், பகவத்கீதையை சேர்க்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே கல்வியில் இந்துத்துவா கொள்கையை குறிப்பாக ஆர்எஸ்எஸ் கருத்துக்களைப் பாடத்திட்டங்களில் நுழைத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மற்றொருபுறம் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் மற்றும் சமூக நீதி குறித்துப் பேசியவர்களைப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. இதற்காக இந்துத்துவா கருத்துகள் கொண்டவர்களைக் கல்வி அதிகாரிகளாக நியமித்து தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அண்மையில் கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்களை நீக்கிவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டது சர்ச்சையானது.

அதேபோல் சிபிஎஸ்சி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசப்பட்டது. தொடர்ந்து பள்ளி பாடத்திட்டங்கள் தொடங்கி பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வரை இந்துத்துவா கருத்துக்களை பரப்ப ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.

அதேபோல் குலக்கல்வித் திட்டத்தின் மறு வடிவமான தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து உயர்சாதி அல்லாத மற்ற வகுப்பினரின் கல்வி கற்கும் நிலையை அழிக்க ஒன்றிய பாஜக அரசு வேலைகளை செய்து வருகிறது. இதனால் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி பாடப் புத்தகங்களில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பாஜக எம்.பி விவேக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் “பள்ளிப் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத பாடப் புத்தகங்களில் பகவத்கீதையின் ஸ்லோகங்களையும், வேதங்களில் உள்ள அறிவையும் சேர்க்க வேண்டும்.

அதேபோல் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் பகவத்கீதையின் குறிப்புகள் இணைக்கப்பட வேண்டும். இந்த நூற்றாண்டில் அறிவு சக்தியாக மாற நாம் நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிய அரசின் கீழ் உள்ள பள்ளிக்கல்வித்துறையை என்சிஇஆர்டியுடன் ஒருங்கிணைத்து இதை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கைக்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.