கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 – 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3% குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது.

மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்விட்டரில், “பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன” என பாஜக மோடி அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இது சமூகவலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர். இதனால் ட்விட்டரில் இந்திய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ராகுல் ஆகியவை டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் அதிர்ச்சியூட்டும் இடத்தில் இந்தியா