15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் மறுபதிவு செய்வதற்கான கட்டணம், ரூ.600-ல் இருந்து ரூ.5,000 ஆக 8 மடங்கு உயர்த்தி ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பழைய வாகனங்களை படிப்படியாக அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகளை ஒன்றிய அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில், 15 ஆண்டுகள் பழமையான கார்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600 ஆக உள்ள கட்டணம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 மடங்கு அதிகம் ஆகும்.
இதேபோல், பழைய இரு சக்கரவாகனங்களின் பதிவை புதுப்பிக்க ரூ.300 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் இனி ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. பழைய பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு ரூ.1500 ஆக இருந்த மறுபதிவு கட்டணம், ரூ.12,500 ஆகவும், சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.10 ,000-ல் இருந்து ரூ.40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் அன்றைய தினத்தில் இருந்து தினமும் ரூ.50,000 அபராதமாக வசூலிக்கப்படும்.
இவை தனியார் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு 300 ரூபாயும், வர்த்தக வாகனங்களாக இருந்தால் 500 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்” என்று கூறப்பட்டுள்ளது.