அமெரிக்காவில் பள்ளிகளை உடனடியாக திறக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிபர் ட்ரம்ப் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தாததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இருப்பினும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார் ட்ரம்ப் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை திறந்து மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தாவிட்டால், கல்வித்துறைக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேநேரம் பள்ளிகள் திறப்புக்கான பொது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராதததுடன் அதிக செலவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் முடிவை எதிர்த்து வழக்கு…
அதிபரின் உத்தரவையடுத்து பள்ளிகள் செயல்படுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகள் கடினமாக இருப்பதை அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தாலும், மாணவர்களில் பெரும்பாலானோர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வகுப்பறைக்கு வருவார்கள் என்று நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.