மெரினா புரட்சி படத்தை வெளியிட அனுமதிப்பது தொடர்பாக, மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மெரினாவில் தமிழக மக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அகற்ற வேண்டும் என உலகமுழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் போராடினார்கள்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாக்கபட்டு அதற்கு மத்திய அரசு,குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. 8 நாட்கள் நடந்த இந்த போராட்டம் உலக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு “மெரினா புரட்சி” என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக படத்தை தயாரித்து வரும் நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள்.
தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், “இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள், விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.
அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இதற்கு இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.