விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக கட்சியின் தேசிய இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யா இருவரும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.
அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் எமர்ஜென்சி கதவிற்கான பட்டனை அழுத்தி திறந்து விளையாட்டு காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இருவரும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், தற்போது விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “2 ஆர்வக் கோளாறுகள் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று விமர்சித்துள்ளார்.