பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “டெண்டரில் முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. முந்தைய நிபந்தனைகளின் படி டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனிடையே மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மணிகண்டன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (31-5-2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை வழக்கை தள்ளுபடி செய்து, அரசின் மேல்முறையீடு மனுவையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்