உச்சநீதிமன்றத்தில் இனி அவசர வழக்குகளைப் பொறுத்த வரை அதற்கென குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்த பின்னரே முறையிட இயலும் என்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் புதனன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் ரஞ்சன் கோகாய் அவரின் அறைக்குச் சென்றபின், வழக்கறிஞர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது வழக்கறிஞர்கள் சிலர் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்க வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறிய விவரம் பின்வருமாறு:
நீங்கள் இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் அதற்கென குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்த பின்னர், எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.ஒருவரை நாளைக்கே தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் அதுகுறித்து விசாரிக்கலாம். எனவே அவசரவழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசரவழக்காக எதையும் முறையிட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பேசுகையில், ரோஹின்கயா முஸ்லிம்கள் ஏழு பேரை மியான்மருக்கு அனுப்ப இருக்கிறார்கள் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.அதற்கு நீங்கள் முதலில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள், அதன்பின் முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.