நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல் என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் இந்த குழுவிற்கு எதிராக தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், “நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்தது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. தமிழ்நாடு அரசு இப்படி குழு அமைப்பது வரம்பு மீறல் கிடையாது.

மாநில அரசின் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படை பணிகளிலும் மனுதாரர் தலையிட முடியாது என்றும், உயர் மட்டக் குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சியாகவே கருத வேண்டும்” எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பில் செயலாளர் எல்.சந்தன் குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ள்ளார். அதில், “நீட் தேர்வுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் சட்ட அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையில் பொது கலந்தாய்வு மூலமாக மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15% இடங்களை ஒன்றிய அரசும், 85% இடங்களை மாநில அரசும் நிரப்பி வருகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் மாநில அரசுகள் வசமே திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு தொடர்பான சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூற முடியாது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற பொதுநலனைக் கருத்தில் கொண்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்து இருப்பது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல்.

இந்த நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இது தேசிய அளவில் நடக்க கூடிய தேர்வு. அதனால் நீட் தேர்வு குறித்து ஆராய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே பிரத்யேக ஆணையம் அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயும் வகையில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஜூலை 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்..