குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள், வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், அதிலிருந்து குழந்தைகள் எப்படி காத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வில் உருவாகியுள்ள “மோதி விளையாடு பாப்பா” என்ற குறும்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார். அவர் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் “மோதி விளையாடு பாப்பா”. ஐந்து நிமிடம் ஓடக்கூய இக்குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இதில் நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்தும், எப்படி இந்த பாலியல் கொடுமையிலிருந்து தப்பிப்பது என்பது பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறது இப்படம். விரைவில், சமூக வலைதளங்களிலும், திரையரங்குகளிலும் இக்குறும்படம் ரிலீசாக இருக்கிறது.

தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு மிக மகிழ்ச்சியோடு முன்வந்து சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதனால் ஒரு தகப்பனாக இதை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.