விஜய் தேவரகொண்டா நடித்துள்ள நோட்டா பட ட்ரெய்லர் வெளிவந்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் தமிழகத்திலும் ஏகத்திற்கும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.
அவர் நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். நானே டப்பிங் பேசுவேன் என்று தமிழில் பேசி அசத்தியுள்ளார் விஜய். அவரின் டெடிகேஷன் வேற லெவலில் உள்ளது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன், சத்யராஜ், நாசர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள நோட்டா பட ட்ரெய்லர் தமிழ், தெலுங்கில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தெலுங்கு ட்ரெய்லர் வெளியான 3 மணிநேரத்தில் அதை 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தான் கோலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும்.
ட்ரெய்லரில் எடுத்ததும் ஏரியை காட்டுகிறார்கள். சிட்டியில் இருக்கும் எல்லா ஏரியும் நிரம்பிவிட்டது. இப்போ நாம் திடீர் என்று ஷட்டரை திறந்தால் பல இடங்கள் நீரில் மூழ்கிவிடும் என்ற வாய்ஸ் ஓவர் கேட்கிறது. ஏரி, ஷட்டர், நீரில் மூழ்கிவிடும் என்றதை கேட்டவுடன் சென்னை மக்களுக்கு தாங்கள் வெள்ளத்தில் தத்தளித்த சம்பவம் தான் நினைவுக்கு வந்திருக்கும். காசு இருந்தும் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கிய அந்த நாட்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் கிடைத்துள்ளார். அவர் தான் விஜய் தேவரகொண்டா. ஏற்கனவே அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகைககள். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தை பல முறை பார்த்த தமிழ் ரசிகைகள் அதிகம். தற்போது நோட்டா ட்ரெய்லரை ரிப்பீட் மோடில் பார்த்து விஜய்யை சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெல்கம் டூ கோலிவுட் விஜய்.
பதவி, எனக்கு ஐடியாவும் இல்லை, அனுபவமும் இல்லை என்று விஜய் கூறியும் அவரை அந்த நாற்காலியில் அமர வைக்கிறார்கள். டம்மி முதல்வர் என்றால் இவ்வளவு டம்மியாவா இருக்க முடியும். இது முதல்வர் பதவியா இல்லை மியூசிக்கல் சேராக என்று மெஹ்ரீன் வசனம் பேசியுள்ளார். இந்த காட்சியை பார்த்ததும் அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். அதனால் நாங்கள் விளக்க வேண்டியது இல்லை. ஆனந்த் சங்கர் உங்கள் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.
முதல்வரின் புதிய திட்டம் குடிப்போம், கூத்தடிப்போம் என்று ஒருவர் பேசுகிறார். முதல்வரான விஜய் ஒரு பெண்ணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறார். இப்ப நடுராத்திரியில் அறிக்கை வெளியிடுவது தான் ஃபேஷனாகிவிட்டது என்று சத்யராஜ் பேசும் வசனம் அருமை. என்ன பாஸ், உண்மையை எல்லாம் இப்படியா வெளிப்படையாக பேசுவீர்கள். அரசியல்வாதிகள் சாமியார்களை நம்புவதையும் விளாசியுள்ளார்கள். இருப்பதிலேயே ஹைலைட் என்னவென்றால் வெல்டன் யூ ஃபக்கிங் பாலிடீசியன்ஸ் என்று விஜய் சொல்வது. பாஸ் சத்தமா பேசாதீங்க, கேஸ் போட்டுவிடுவார்கள்.
இரண்டு மூன்று நாட்களுக்கு கலவரம் நடக்கட்டும் என்று அரசியல்வாதியே கூறுவதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடையவில்லை. அரசியல் என்னும் விளையாட்டை ஒரு முறை தொட்டுவிட்டால் விட முடியாது. வாழ்வா, சாவா தான் என்கிறார் சத்யராஜ். அதாவது அரசியல் ஒரு வழிப்பாதை, வந்தால் திரும்பிச் செல்ல முடியாது என்கிறார். இப்படி உண்மையை எல்லாம் புட்டு புட்டு வைத்திருக்கும் நோட்டா ட்ரெய்லர் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். ட்ரெயல்ரை பார்க்கும்போதே கேஸ் போடப் போகிறார்கள் பாஸ் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. இது ட்ரெய்லர் அல்ல நிஜம்.