ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர் ஜூலி. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கை பிடிக்காமல் சிலரின் வெறுப்பையும் பெற்றார். இருப்பினும் பிக்பாஸ் மூலமாக ஓவியாவிற்கு அடுத்தபடியாக ஜுலி பிரபலமானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள “அம்மன் தாயி” திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது. பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா… என்ற சிங்கிள் டிராக் ரிலீஸாகி வைரலானது. மடப்புரம் பத்ரகாளி, சமயபுரம் மாரியம்மா, யானைக்குழாய் தீர்த்தக்காரி என அம்மன் பெயர்களை பட்டியலிடப்பட்ட பாடலாக உள்ளது.

கேசவ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ்வரனும், சந்திரஹாசனும் இணைந்து இயக்கியுள்ளனர். தற்போது அம்மன் தாயி திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். “உலக பிரசித்திப் பெற்ற வடக்கம்பட்டி திரு முனியாண்டி சாமி ஆசியுடன்” என டைட்டில் போட்டு துவங்கும் டீசர் மிரட்டும் வகையில் உள்ளது.

31 நொடிகள் ஓடும் டீசரில் மண்டை ஓட்டிலிருந்து ஆவி போவது, பாம்பு படமெடுப்பது, இருட்டுக்குள் பலர் ஓடுவது, ஒரு பெண் அடிபட்டு ரத்தத்தோடு கிடப்பது, இறுதியில் அம்மன் வேடத்தில் இருக்கும் ஜூலி, ஆக்ரோஷமாக காட்சியளிப்பது என வேகமாக நகர்கிறது. இப்படத்தின் மூலம் ஜூலிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது.

ஒரு ஜூலியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஜூலி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் வகையில் இப்படத்தில் ஜூலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.