நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை மற்றும் சென்னை மாநகராட்சியின் கிடுக்கிபிடி காரணமாக, ராகவேந்திரா மண்டபத்துக்கான சொத்து வரி ரூ.6.50 லட்சத்தை நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக வங்கியின் காசோலை மூலம் செலுத்தியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் கோடம்பாக்கத்தில் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை. மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கிவிட்டோம். அதனால் சொத்து வரி செலுத்த இயலவில்லை.
ஆனால், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்தாவிட்டால், 2% அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். மண்டபம் காலியாக இருந்தால், மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. அது தொடர்பாக என் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று ரஜினி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு (அக்டோபர்.14) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, ரஜினி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23 -ல் கடிதம் அனுப்பிவிட்டு, செப்டம்பர் 29-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? நடிவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? எனக் கேள்விகள் எழுப்பியதோடு, இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார்.
இதையடுத்து, ரஜினி தான் செலுத்த வேண்டிய ரூ.6.5 லட்சம் வரியை இன்று (அக்டோபர்.15) இரவு 12 மணிக்குள் செலுத்த வேண்டும். அதை ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2% அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் சொத்துவரி ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்துவிட்டார் ரஜினி. ஆனால் அவர் வரி செலுத்திய கர்நாடக வங்கியின் காசோலை ரசீது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“வாழ வைப்பது தமிழகம். ஆனால் ரஜினிக்கு அவர் மாநில வங்கி தான் பிடிக்கும் போன்று. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழகத்திற்கு நல்லது செய்துவிட்டீர்கள் எனவும், ரஜினி தெளிவாகத் தான் இருக்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார். கண்டக்டர் வேலை கொடுத்த மண் மீது தான் அவருக்கு பாசம் அதிகம்” எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 2018ம் ஆண்டு முதலே, ரஜினி, தனது மண்டபத்திற்கான சொத்துவரியை சரியாக செலுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இன்று காலை ரஜினி வெளியிட்டுள்ள பதிவில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகவேந்திரா மண்டப சொத்து வரி…
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்
— Rajinikanth (@rajinikanth) October 15, 2020
மேலும் வாசிக்க: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ படத்தில் விஜய்சேதுபதி