நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் மோடி அரசு மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவைக் கடந்த திங்களன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மாணவர்களின் ஓராண்டை வீணாக்கக் கூடாது என்றும் தேர்வுகளை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இதனால் செப்டம்பர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தேசிய தேர்வு அமைப்பு (NTA) தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்த தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது பதிவில், “கொரோனா தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள் பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

அவர்களின் கவலைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். விரைவாக அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு தீர்வை அறிவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க: விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு கொடுத்த மோடி அரசு- உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு