கஜா புயலினால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
புதுக்கோட்டையை அடுத்துள்ளது மேலூர் கிராமம். கஜா புயலில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. புயல் அடித்து நான்கு நாட்களாகியும் மேலூரில் எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
 
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் புதன்கிழமையன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ரகுபதி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து வருவாய்த் துறையினரும், காவல்த் துறையினரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான தீத்தப்பன் தனது அடியாட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியுள்ளார்.
 
இதில் படுகாயம் அடைந்த டி.ரகுபதி மற்றும் சி.பழனிச்சாமி ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் மா.ஜியாவுதீன், ஏ.ஸ்ரீதர், எம்.ஆர்.சுப்பையா, டி.சலோமி, பி.சுசீலா உள்ளிட்டோர் பார்த்து விபரங்களைக் கேட்டறிந்தனர்.
 
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அதிமுக ரவுடிகளின் இத்தகைய அராஜகச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.