“விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடந்த 5 ஆண்டுகளாக சீரழித்துவிட்டு, நாளுக்கு ரூ.17 வழங்கப்படும் என்று அறிவிப்பது, அவர்களின் உழைப்பை அவமதிக்கும் செயல்’ என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “”கடந்த 5 வருட கொடுங்கோல் ஆட்சியினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.17 வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, அவர்களின் உழைப்பை அவமதிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “”பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலம் முடியப் போகும் வேளையில், அந்த அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டால் எந்தப் பலனும் இல்லை.
 
தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்த பின்னர், பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள எந்தத் திட்டத்தையும் மத்திய அரசால் செயல்படுத்த முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அரசு, இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்தப் போவதில்லை.
 
தற்போது விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்துள்ள பாஜக அரசு, கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஒரு திட்டத்தையும் அறிவிக்காதது ஏன்? பாஜக அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு-சேவை வரி நடவடிக்கைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.