நான் விவசாயி மகன் எனக் கூறி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 18 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை டிஐஜியாக இருந்த லக்மிந்தர் சிங் ஜக்கர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும். நீண்ட நாட்களாக விவசாயிகள் அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எவரும் அவர்களது குரலை கேட்கவில்லை. அரசுப்பணியில் இருப்பதால் என்னால் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது.

எனவே முன்கூட்டியே என்னை பணியில் இருந்து விடுவியுங்கள். மேலும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமானால், நான் மூன்று மாதம் முன்கூட்டியே அரசுக்கு நோட்டீஸ் தரவேண்டும். அல்லது இன்றே பதவி விலக வேண்டுமானால், மூன்று மாத காலத்துக்கான ஊதியத்தை அரசுக்கு திருப்பித் தரவேண்டும். ஆகையால் ஊதியத்தை திருப்பியளிக்க தயாராக உள்ளேன்.

நான் தற்போது அதிகாரியாக இருப்பதற்கு முழு முதற்காரணம் என்னுடைய தந்தை விவசாயியாக இருந்து என்னை ஆளாக்கினார். அது குறித்து நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இப்போராட்டத்துக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி. ஒருவர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி எல்லைகளில் திங்களன்று (டிசம்பர் 14) அனைத்து போராட்ட இடங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்து, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தானும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்த விவசாயிகள்; நாளை உண்ணாவிரதப் போராட்டம்