“நான் தமிழ்ல பேசுறேன்; உங்களுக்கு புரியுதா சொல்லுங்க..” என சிரித்தபடியே கூலாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் இந்தி எதிர்ப்பை பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை ஆங்கில மொழியில் வைக்காமல் இந்தியை திணிக்கும் வகையில் இந்தி மொழியிலேயே பாஜக அரசு வைத்து வருவதற்கு, நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரால் அறிவிக்கப்படும் திட்டங்களின் பெயர்கள், மற்ற மொழி பேசுபவர்களால் உச்சரிப்பதற்கு கூட தடுமாறும் பட்சத்தில், அந்த திட்டம் குறித்த பயன்கள் மக்களை எப்படி சென்றடையும் என மக்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி எம்பி,

சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே திட்டங்களின் பெயர்களை வைக்கலாமே என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழி காலநிலை மாற்றம் தொடர்பாக உரையாற்றியிருந்தார். அப்போது ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என இந்தியில் வைத்திருந்த திட்டத்தின் பெயரை உச்சரிப்பதில் சிரமப்பட்டதோடு, இது மிகவும் கடினமாக உள்ளது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, இதுதான் பிரச்னையாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு மொழிகளை பேசுவதை நீங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஆகையால் திட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் அல்லது மாநில மொழிகளில் இருந்திருந்தால் உறுப்பினர்களான எங்களும் படிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்காது எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘உங்களுக்கு புரியாமல் போனால் என்ன செய்வது?’ என வினவினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, “சரி.. நான் தமிழ்லயே பேசுறேன். உங்களுக்கு புரியுதானு சொல்லுங்க; அதுக்கு பெர்மிஷன் கேக்கனும்னு சொல்றீங்களே? அதுதான் பிரச்னை” பதிலடி கொடுத்தது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும், இந்தியில் பேச நாடாளுமன்றத்தில் எந்த தடையும் இல்லை, ஆனால் மற்ற மொழிகளில் பேசுவதாக இருந்தால் மொழிபெயர்ப்பாளர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்வதற்காக முன் அனுமதி பெறவேண்டும் எனக் கூறிய கனிமொழி, அதேவேளையில் இந்தியில் பேசும்போது அதை மற்றவர்களுக்கு மொழி பெயர்க்க எந்த ஏற்பாடுகளும் நாடாளுமன்றத்தில் இல்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.

மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனிமொழி சிரித்தபடியே இந்தி எதிர்ப்பையும் பதிவு செய்ததற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.