நாடு முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க உள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து மாநிலங்களும் முழு அளவில் தயாராக உள்ளன.
அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக உள்ளோம். சென்னை, கர்னல், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர நாடு முழுவதும் 37 தடுப்பூசி விற்பனை கூடங்கள் உள்ளன.
ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து, கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்க, மற்றும் வழங்குவதற்கு, இந்தியாவிலும் உலக அளவிலும் இணைந்து செயல்படும் என்று கூட்டாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்திற்கானவை. மேலும் அவை உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு விரைவாக திருப்பி கொண்டுவரவும் சக்தி கொண்டவை.
தற்போது இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை இணைந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளன. தேவைப்படும் மக்களுக்கு அதிக தரம் வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை வழங்குவோம்” என்று அதில் கூறியுள்ளனர்.