கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 16-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கப்படயிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய 525 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது ஏப்ரல்-மே பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாற்றியமைப்படும் தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.