நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிறுநீரைச் சேமித்து வைத்தாலே, அதிலிருந்து நமக்குத் தேவையான யூரியாவை தயாரிக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.
 
ஆளும் பா.ஜனதாவில் சிலர், இவரைத்தான் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது
 
சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையும், கட்சித் தலைவர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இந்த நிலையில், நாக்பூரில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய கட்கரி, மனித சிறுநீரில் அமோனியம் சல்ஃபேட் மற்றும் நைட்ரஜன் இருப்பதாகவும், எனவே, அது உயிரி உரம் தயாரிப்பதற்கு ஏற்றது என்பதால், சிறுநீரிலிருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் கூறினார்.
 
“இவ்வாறு சிறுநீரிலிருந்து யூரியா தயாரித்தால் இந்தியாவுக்கு உரம் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.
 
மேலும் இயற்கை கழிவுகளிலிருந்துதான் உயிரி உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, நமது நாட்டிலுள்ள விமான நிலையங்கள் போன்ற இடங்களில் சிறுநீரை சேமித்து வைக்கலாம்.
 
நாடு முழுவதும் நாம் சிறுநீரை சேமித்து வைத்தால் நாம் யூரியா இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. அதில் அத்தனை சத்துகள் உள்ளன. எதுவுமே வீணாகாது.
 
எனது யோசனைகள் எல்லாமே நன்றாக இருப்பதால், மற்றவர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
 
மாநகராட்சி கூட உதவுவதில்லை. ஏனெனில், காளைகளை ஓட்டிச் செல்லும்போது அவை அங்கே இங்கே பார்க்க முடியாதவாறு எப்படி ஒரே திசையை நோக்கிச் செல்ல வைக்கிறோமோ அப்படித்தான் அரசாங்கத்தில் இருப்பவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
 
இதுமட்டுமல்ல, வெட்டிப் போடப்படும் மனித முடியிலிருந்து உரமாகப் பயன்படுத்தக்கூடிய அமினோ அமிலத்தைத் தயாரிக்க முடியும்.
 
அப்படி அதைப் பயன்படுத்தினால் விளைச்சலும் வழக்கமானதைவிட 25 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.
 
நான் எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில் அமினோ அமிலம் தயாரித்து விற்கிறேன். துபாய் அரசிடமிருந்து 180 கன்டெய்னருக்கான ஆர்டரையும் நாங்கள் பெற்றுள்ளோம்” என கட்கரி கூறினார்