கொரோனா தொற்றுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தயாரி்த்துள்ள தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1,000 அல்லது அதற்கு குறைவான விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. AZD1222 என்ற அந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் முதல் கட்டத்தில் சாதகமான முடிவுகளை கொண்டிருந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சோதனை முடிவுகளின்படி, இது எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை, எனினும், சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அதனை பாராசிட்டமல் எடுத்துக் கொள்வதன் மூலமே சரிசெய்து விடலாம் என்றும், ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு மறுமொழிகளையும் வெளிப்படுத்தவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி இறுதியாக வெற்றி பெற்றால் அதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முயன்று வருகிறது.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி அதர் பூனாவாலா செய்தியாளரிடம் தெரிவித்தது, “மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும்.
மேலும் வாசிக்க: N95 முகக் கவசங்களால் கொரோனாவை தடுக்க முடியாது; மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் இருந்து பெற முயன்று வருவதாக குறிப்பிட்ட அதர் பூனாவாலா, இது வெற்றி அடைந்தால், அதிக அளவிலான தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.
நாங்கள் திட்டமிட்டது போன்ற முடிவுகள் வந்தால், இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களுக்குள் சில லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். பின்னர் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 300- 400 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.
நிச்சயம் இந்த தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும். நாங்கள் இந்த தடுப்பூசி ஒன்றை ரூ.1,000 அல்லது அதற்கு குறைவான ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளோம். ஆனால் பெரும்பாலும் இந்த மருந்துகள் அரசாங்கத்திற்கு விற்கப்படும். நோய்தடுப்பு திட்டங்கள் மூலம் மக்கள் அதனை இலவசமாக பெரும் வகையில் இருக்கும்” என்று அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.