2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசை தடுக்க உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றன. பல்வேறு வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடைபெறுவதாகவும் பல்வேறு நாடுகள் தினம் ஒரு செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆகஸ்டு 15ந்தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல்கள் வெளியானது, ஆனால் மனித பரிசோதனை தற்போது தான் முதற்கட்டதை எட்டியுள்ளது. மேலும் ரஷ்யா, ஜெர்மனி, சீனா உள்பட நாடுகள் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறிவருகின்றன.

அதேபோல் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தயாரி்த்துள்ள தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் ரூ.1,000 அல்லது அதற்கு குறைவான விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: நவம்பரில் கொரோனா தடுப்பூசி 1,000 ரூபாய்க்கு கிடைக்குமா…

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குனர், மைக்கேல் ரியான் பேசும்போது, பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெறுவகிறது. தற்போது, பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் 3-ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், முழுமையான சோதனைக்கு பிறகே விநியோகத்திற்கு வரும்.

எனவே கொரோனா தடுப்பு மருந்தை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்றார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை சார்ந்து இல்லாமல், தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்” என்றும் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.