தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் மாநில திட்டக் குழு தற்போது தமிழ்நாட்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1971ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலம் இந்த குழு உருவாக்கப்பட்டது. மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி பணிகள், நிதி மேலாண்மை, திட்டங்களை செயல்படுத்துதல் என்று உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது.
இதன் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தற்போது துணைத் தலைவராக பொருளாதார வல்லுனர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார். மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் துணைத் தலைவரானது, ஒரு அமைச்சருக்கு நிகரான அதிகாரம் அளிக்கப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தற்காலிக உறுப்பினர்களாக 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நடனக்கலைஞரான திருநங்கை நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.
பத்மஸ்ரீ பட்டம் பெற்ற முதல் திருநங்கை கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச விருதுகளை தனது நடனம் மூலம் பெற்று இருக்கிறார். தஞ்சாவூர் நாட்டிய முறை, தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை நர்த்தகி நடராஜனுக்கு உண்டு.
நாட்டியம் தவிர்த்து சமூக தேவை பணிகளிலும், எல்ஜிபிடிக்யூ+ உரிமைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் திருநங்கை நர்த்தகி நடராஜன். இவரின் வரலாறு மற்றும் சாதனைகள் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது மாநிலத்தில் வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல்லா பிரிவினருக்கும் இந்த குழுவில் இடமளிக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் என்று பல வல்லுநர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.
அதில் மூன்றாம் பாலினத்தவர் சார்பாக திருநங்கை நர்த்தகி நடராஜனும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் சாதனைகள் மற்றும் பணிகள் காரணமாக அவருக்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் மாநில, மத்திய அரசின் திட்டக்குழுவில் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த முடிவு, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பேரா. ஜெ.ஜெயரஞ்சனுக்கு முக்கிய பொறுப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்